பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையர் அயந்தன்.

 
தமிழகம்

நடுக்கடலில் மீன் பிடித்தபோது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையரை பிடித்த நாகை மீனவர்கள்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​களுக்​கும், இலங்கை கடற்​கொள்​ளையர்​களுக்​கும் மோதல் ஏற்​பட்டது. இதில் ஒரு​வரை நாகை மீனவர்​கள் பிடித்து வந்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

மேலும் 2 பேர் படகு மூலம் தப்பினர். நாகை மாவட்​டம் செருதூரிலிருந்து பால​முரு​கன் என்​பவருக்​குச் சொந்​த​மான பைபர் படகில் கடந்த 25-ம் தேதி சக்​தி​ம​யில், அபிமன், பாலசுப்​பிரமணி​யன், பழனிச்​சாமி, கன்​னி​யாகுமரி உவரி பகு​தியை சேர்ந்த அபி ஆகியோர் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

நேற்று முன்​தினம் இரவு 11 மணி​யள​வில் அங்கு ஒரு படகில் இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் 3 பேர் வந்தனர். மீனவர்களைத் தாக்​கி, படகில் இருந்த மீன்​கள், ஜிபிஎஸ் கரு​வி, செல்​போன் ஆகிய வற்றை பறித்​துக் கொண்​டு, வலை​யை​யும் அறுக்க முற்​பட்​டனர்.

அதை தடுக்க முயன்​ற​போது இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில், கடற்​கொள்​ளையர்களில் ஒருவரை செருதூர் மீனவர்​கள் பிடித்தனர். மற்ற 2 பேர் படகில் தப்​பினர்.

பிடிபட்ட நபர் இலங்கை காங்​கேசன்​துறை வழலை​யைச் சேர்ந்த அயந்​தன் என்​பதும், இவர் உள்ளிட்ட 3 பேரும், இதற்கு முன் செருதூர் மீனவர் மணி​வாசகம் என்​பவரது படகை மறித்​து, அதிலிருந்​தவர்​களை தாக்​கி உடமைகளை கொள்ளையடித்ததும் தெரிய​வந்​தது.

பின்​னர் அவரை செருதூர் மீன்​பிடி இறங்​கு தளத்​துக்கு நேற்று அழைத்து வந்து கீழையூர் போலீ​ஸாரிடம் மீனவர்​கள் ஒப்​படைத்​தனர். கடலில் நடந்த மோதலில் காயமடைந்த அயந்​தன், நாகை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அதே​போல, கடற்​கொள்​ளை​யர்​கள் தாக்​கிய​தில் காயமடைந்த செருதூர் மீனவர்​கள் 7 பேரும் மருத்​து​வ​ மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட மீனவர் மணி​வாசகம் கூறும்​போது, எங்​கள் படகை வழிமறித்த இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள், படகில் இருந்த மீன்​பிடி சாதனங்​கள் மற்​றும் மீன்​களை பறித்​துக் கொண்​டனர்.

தொடர்ந்து நள்​ளிரவு முதல் அதி​காலை 3 மணி வரை அடித்து உதைத்து கொடுமைப்​படுத்​தினர். எனது மகனின் கழுத்தில் கத்​தியை வைத்து மிரட்டி, இனி நீங்​கள் வந்​தால் பெட்​ரோல் குண்டு வீசி கொன்று விடு​வோம் என மிரட்​டினர் என்​றார்.

தாக்​குதல் நடத்​திய இலங்கை கடற்​கொள்​ளை​யர்​களில் ஒரு​வரை தமிழக மீனவர்​கள் பிடித்து வந்து தமிழக போலீஸாரிடம் ஒப்​படைத்​துள்ளது இதுவே முதல்​முறை​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT