நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் என மூன்று சட்டமன்ற தொகுதிகள உள்ளன. இம்முறை இந்த மூன்றையுமே தங்களுக்காக கேட்டு திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் விருப்ப மனு கொடுத்திருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மறுகிக் கொண்டு இருக்கிறார்கள் கூட்டணியை தலைமை தாங்கி வழிநடத்தும் திமுக-காரர்கள்.
நாகை சட்டமன்றத் தொகுதி தற்போது விசிக வசம் இருக்கிறது. இம்முறையும் நாகை எங்களுக்கே வேண்டும் என வலியுறுத்துகிறது விசிக. ஆனால், கடந்த முறை திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை அதற்குப் பதிலாக நாகையைக் கேட்கிறது. இங்கே முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் நிற்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார்கள். கீழ்வேளூர் தொகுதி தற்போது மார்க்சிஸ்ட்கள் வசம் உள்ளது. தற்போது நாகை மாலி அங்கே சிட்டிங் எம்எல்ஏ. இம்முறை அவருக்குப் பதிலாக மாநிலச் செயலாளர் சண்முகத்துக்காக கீழ்வேளூரை தங்களின் விருப்பப் பட்டியலில் சேர்த்திருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.
மூன்றில் இரண்டு தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு போவது உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு தொகுதியான வேதாரண்யத்தில் களமிறங்க எஸ்.கே.வேதரத்தினம், மா.மீ புகழேந்தி உள்ளிட்ட 24 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். ஆனால், இந்தத் தொகுதியையும் காங்கிரஸ் தங்களுக்காகக் கேட்டு மல்லுக்கட்டும் போலிருக்கிறது.
தாங்கள் பலமுறை வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத் தொகுதி என்பதால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.வி.ஆர்.விவேக் வேதாரண்யத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறார். இவர் முன்னாள் எம்பி-யும் எம்எல்ஏ-வுமான பி.வி.ராஜேந்திரனின் மகன். ஒருவேளை மகனுக்கு மறுக்கப்பட்டால், தானே களமிறங்கும் திட்டத்தில் பிவிஆரும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் காங்கிரஸ் கட்சி வேதாரண்யத்தை தங்களுக்காக கேட்டுள்ளது.
ஆக, மூன்று தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளே கூறுபோட துடிப்பதால், திமுக-வில் காலங்காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் எம்பி-யான ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், கடந்த முறை போட்டியிட்டு தோற்ற முன்னாள் எம்எல்ஏ-வான எஸ்.கே.வேதரத்தினம், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் போன்றவர்களுக்கு மாவட்டத்தில் என்ன மரியாதை இருக்கும் என திமுக-வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த முறை தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்குவதை தவிர்த்து மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலுமே திமுகவே நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என திமுக தரப்பிலிருந்து தலைமைக்கு வலியுறுத்தி இருக்கிறார்களாம். திமுக தலைமை சொந்தக் கட்சியினர் சொல்லுக்கு மதிப்பளிக்கிறதா அல்லது கூட்டணிக் கட்சிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.