சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவ்வேளையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தத் தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் பலத்தைக் காட்டும் விதமாக, வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, சீமான் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதற்கேற்ப சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர். அதன்படி, கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பாளர் எ.சரண்யா எழும்பூர் தொகுதியிலும், சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் ஆர்.கே.நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சி.சங்கர் அண்ணாநகர் தொகுதியிலும், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பெனஷான் ஷெரிப் துறைமுகம் தொகுதியிலும், தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் கீர்த்தனா வேளச்சேரியிலும், ஆ.பாபுமைலன் ராயபுரம் தொகுதியிலும், சமூக ஆர்வலர் ரோஷினி வில்லிவாக்கத்திலும் போட்டியிடுவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது.