மதுரை: கோயில் சொத்துகளை பத்திரப் பதிவு செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அரசாணைக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கோயில் நிலங்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவுத் துறையில் கோயில் நிலங்களின் மதிப்பீட்டை 'பூஜ்ஜியம் மதிப்பு' என பதிவு செய்யப்படுவது வழக்கம்.
இதனால் கோயில் நிலங்களை வேறு யாரும் பத்திரம் பதிவு செய்யவோ, பட்டா பெறவோ முடியாது. கோயில் நிலங்களை யாராவது பத்திரப்பதிவு செய்ய முயன்றால் பதிவுத்துறையில் புகார் அளித்து பதிவு ரத்து செய்தோ அல்லது பதிவு நிறுத்தியோ வைக்கப்படும். இந்நிலையில் கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யவும், பட்டா பெறவும் வழிவகை செய்யும் வகையில் வருவாய்த் துறை 29.8.2025-ல் அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணை அடிப்படையில் கோயில் சொத்துகள் தொடர்பாக முறையீடு செய்ய வேண்டும் என்றால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிடம்தான் முறையிட முடியும். இந்த அரசாணை கோயில் சொத்துகள் தனிநபர்களுக்கு எளிதாகப் பெயர் மாற்றம் செய்ய வழிவகுக்கிறது.
இது சட்டவிரோதம். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்பாடுகளில் கோயில் நிலங்கள் உள்ளன. புதிய அரசாணையால் கோயில் சொத்துகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசாணையை ரத்து செய்தும், அதுவரை அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அந்த அரசாணை திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.