சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத் திட்ட வடிவமைப்பு உயர்நிலைக் குழு, வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வு செய்தது. ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் பெற்றது. அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத் திட்டத்துக்கான அறிக்கையை தயாரித்து அரசிடம் வழங்கியது. அதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: பள்ளி பாடத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதன் தலைவராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செயல்படுவார். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேர் உறுப்பினராக இருப்பார்கள். மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் இக்குழுவின் உறுப்பினர் - செயலராக செயல்படுவார். உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தற்போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புதிய குழு, 4-ம் வகுப்பு முதல் புதிய பாடத் திட்டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும். குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்படியாக புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படும்.