அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம் 
தமிழகம்

“அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய என் கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது” - மா.சுப்பிரமணியன்

வெற்றி மயிலோன்

சென்னை: “நான் கூறிய அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. உரிமைக்காக போராடுபவர்களை என்றைக்கும் மதிப்பவன் நான்” என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு சில போராட்டங்கள் பற்றி கருத்துக் கூற நேரிடும்போது, நான் கூறிய அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. உரிமைக்காக போராடுபவர்களை என்றைக்கும் மதிப்பவன் நான். ஏனென்றால் நானே அமைச்சர் ஆவதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்தவன் தான்.

          

அதிலும் குறிப்பாக, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு ஊழியர்களின் உழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவன். அதனால் எனது கருத்தினை அரசு ஊழியர்கள் யாரும் தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அவர்கள் 6,7 சங்கங்களாக இருக்கிறார்கள். நாங்கள் அழைத்துப் பேசியிருக்கிறோம். அவர்கள் 2013-ல் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எடுக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள்.

அரசு தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற காரணத்தினாலே தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எல்லோரும் பணி நிரந்தரம் கேட்டு போராடுவது இப்போது பேஷனாகிவிட்டது” என்றார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை உருவாக்கியது. அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சூழலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT