புதுக்கோட்டை: “குறுவை நிவாரணத் தொகையா, சிறப்புத் தொகுப்பா என்பதில் முதல்வர், அமைச்சர் பதிலில் முரண்பாடு உள்ளது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை விளக்கி, ஆக.6-ம் தேதி முதல் நடைபயணப் பிரச்சாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ளது. வரும் 14-ம் தேதி வரை இந்தப் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கடைவீதியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமையில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில், கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றுப் பேசினார். அதற்கு முன்பாக பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு நினைவு தினத்தையொட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் கூறியது: “கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். ‘கூட்டத்தைக் கூட்டினால் ஆளுக்கொரு கருத்தைக் கூறுவார்கள், ஆகையால் கூட்ட வேண்டியதில்லை’ என்று தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேசமயம், தவெகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் முதல்வர் கூட்ட வேண்டும்? அங்கு மாறுபட்ட கருத்தைக் கூற மாட்டார்களா?
மழைக் காலத்தில் தமிழகத்தை வடிகாலாக மட்டுமே கர்நாடகம் கருதுகிறது. அதேசமயம் மேகேதாட்டுவில் அணை கட்டிவிட்டால் தண்ணீரை முழுமையாகத் தேக்கிவிடுவார்கள். இதனால் தமிழகம் பாலைவனமாகும், 20 மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 125-ஆக மத்திய அரசும், 150-ஆக மாநில அரசும் உயர்த்தும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.7,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ.5,000 கோடி ஒதுக்க வேண்டும். இதைப் பற்றிய அறிவிப்பு எதுவுமில்லை. நிதி ஒதுக்காதபோது இந்தத் திட்டத்தைத் தமிழகத்தில் எப்படிச் செயல்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
காவிரியில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், "தேவைப்பட்டால் அடுத்த மாதம் நிவாரணம் கொடுக்கப்படும்" என்கிறார் வருவாய்த் துறை அமைச்சர். அதேவேளையில், "விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது" என முதல்வர் கூறுகிறார். அரசு வழங்கியது நிவாரணம் அல்ல. அது குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் மட்டுமே. இது முந்தைய ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்டதுதான். இதில் முதல்வர், அமைச்சருக்கு இடையே முரண்பாடு உள்ளது.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது போதுமானதல்ல. இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தினார்.