தமிழகம்

தேர்தல் ரீவைண்ட்: எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவராக இருந்து எம்எல்ஏ ஆன முசிறி புத்தன்!

செய்திப்பிரிவு

திருச்சி: புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்று இன்று வரை சொல்வதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் எம்ஜிஆர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மக்கள் பிரதிநிதிகளாக்கி அழகு பார்த்தது.

அதில் முதலாமவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த முசிறி புத்தன். திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்தநிலையில், அதிமுகவை ஆரம்பிப் பதற்கு முன்பு திருச்சியில் தாமரை வரைந்த கொடியை அதிமுக கொடியாக ஏற்றியவர் முசிறி புத்தன்.

அதன்பிறகு கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணத்தில் அண்ணாவுடன் கூடிய அதிமுக கொடி உருவானது. இதைத்தொடர்ந்து, 1977-ல் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முசிறி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

          

அதைத்தொடர்ந்து 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி-1 (தற்போது திருச்சி கிழக்கு) தொகுதியிலும், 3-வது முறையாக 1984-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

ஆக, ரசிகர் மன்ற நிர்வாகியும் மக்கள் பிரதிநிதி ஆகலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் முசிறி புத்தன். இதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பரும், ரசிகர் மன்றத் தலைவருமாக இருந்த ராமு வசந்தன் உள்ளிட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரை விஜயகாந்த் எம்எல்ஏ ஆக்கியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து வரும் தேர்தலில் களம் காண்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவையில் நுழைகிறார்கள் என்பதை பொறுத்திருத்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT