கோப்புப் படம்

 
தமிழகம்

முரசொலி அலுவலக நில விவகாரம்: பட்டியலின ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என அறக்கட்டளை நிர்வாகம் வாதம்

செய்திப்பிரிவு

சென்னை: முரசொலி அலுவலக நிலத்தின் உரிமை குறித்து விசாரிக்க தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை கோடம்பாக்கத் தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என குற்றம்சாட்டி, பாஜக மாநில நிர்வாகியான சீனிவாசன் கடந்த 2019-ல் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, இதுதொடர்பாக புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பஞ்சமி நிலம் அல்ல: இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இதுதொடர்பாக புகார் அளித்துள்ள பாஜக நிர்வாகி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் அல்ல என கடந்த 2019-ம் ஆண்டு தலைமைச் செயலர் தெளிவாக அறிக்கை அளித்துள்ள நிலையில், அந்த நிலத்தின் உரிமை குறித்து விசாரிக்க பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என வாதிட்டார். தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘ஆணையத்துக்கு வந்த புகாரை விசாரிக்க அரசியல் சாசன அமைப்புக்கு எந்த தடையும் கிடையாது.

அந்த நிலத்தின் உரிமை குறித்து ஆணையம் எந்த முடிவும் எடுக்காது. மாறாக, அந்த நிலம் பஞ்சமி நிலமா, இல்லையா என்பது குறித்துதான் விசாரணை நடத்தவுள்ளது’’ என்றார். அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT