மதுரை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கள்ளிக்குடியைச் சேர்ந்த மருது சேனைத் தலைவர் ஆதிநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024 - 2026 ஆண்டுகளில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நகர் திட்டமிடல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்த நியமனத்தின்போது ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு பணி நியமனம் நடைபெற்றதாகவும், ரூ.634 அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தினர்.
அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்களில் ரூ.634 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை 27.10.2025-ல் கடிதம் அனுப்பியுள்ளது.
இருப்பினும் இதுவரை டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத் துறை கடிதத்தின் பேரில் உள்துறை செயலாளரிடம் ஒப்புதல் பெற்று வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘நீதிபதிகள், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கடிதம் யார் எழுதியது? கடிதம் யாருக்கு எழுதியது? நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதத்தில் இறுதியில் யாருடைய கையெழுத்தும் இல்லையே? இந்த ரகசிய அறிக்கை எப்படி மனுதாருக்கு கிடைத்தது?’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘அமலாக்கத் துறை டிஜிபிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘இந்த முழு அறிக்கையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதா? எந்த சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது என்பதை குறிப்பிடவில்லையே?’ என்றனர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ‘இந்த வழக்கின் மனுதாரர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது 27 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 3 கொலை முயற்சி வழக்குகள்.
இவருக்கு அமலாக்கத் துறை அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளி தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.
இதே கோரிக்கையுடன் சென்னையில் தலைமை நீதிபதி அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் டிச.8-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவையும் சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும். ரிட் மனு தாக்கல் செய்து வழக்குப் பதிவு செய்யுமாறு கோரிக்கை வைக்க முடியாது. இதனால் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்றார். பின்னர் நீதிபதிகள், இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.