சென்னை: மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறையில் எஃப்க்யூஎல் (FQL) நிறுவனம் நடத்திய மோசடி குறித்து மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான விஸ்வநாதன் இந்த முறைகேடு குறித்து விளக்க அறிக்கையை அளித்தார்.
அவர் தனது உரையில், “தமிழக சட்டமன்ற வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாள். தமிழக வரலாற்றில் பல முதல்வர்கள் உரையாற்றி இருக்கிறார்கள். ஆனாலும், முதல்வர் விஜய் ஆற்றிய உரை ஊழலுக்கு எதிரான; ஊழலில் ஊறித் திளைத்தவர்களை தோலுரித்துக்காட்டுகிற ஓர் அற்புதமான உரையாக இருந்தது.
நான் சார்ந்த மேலூர் தொகுதியிலும் திண்டுக்கல், நத்தம், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளிலும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் வர்த்தகம் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதனும் இது குறித்து சட்டப்பேரவையில் இரு தினங்களுக்கு முன்பு பேசி இருக்கிறார்.
எனவே, இது தொடர்பாக அவைக்கு அரசின் சார்பில் விளக்கம் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜி இன்வெஸ்ட்மெண்ட் குருப் ஆப் சிண்டிகேட் மற்றும் எஃப்க்யூஎல் முதலீட்டு வர்த்தகம் என்ற பெயர்களில் அமெரிக்காவில் இருந்து இயங்குவதாகக் கூறப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் உடன் இணைந்த கிரிப்டோ கரண்சி வர்த்தகம் செயல்பட்டு வந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா கட்டயம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று திரும்பி வந்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இதனை உள்ளூர்களில் செயல்பட்டு வந்துள்ளார்.
குறைந்தபட்சம் ரூ.50,000 முதலீடு செய்தால் நாளொன்றுக்கு ரூ.2,000 வருமானமும், 40-45 நாட்களில் முதலீடு இரட்டிப்பாகும் என்ற ஆசை காட்டி பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளார்கள்.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் 31.05.2026 அன்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு ரஞ்சித், பிரியதர்ஷினி, ரேவதி ஆகியோரிடம் அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து உறுதிமொழி கடிதம் பெறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எஃப்க்யூஎல் கணக்குகளில் இருந்து முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாத சில சம்பவங்கள் காரணமாக 27.08.2026 அன்று செந்தில் குமார் என்பவர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பலரும் புகார் அளித்ததை அடுத்து, இவ்விவகாரத்தில் காவல்துறை தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த மாதம் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது வரை 40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் அரசுக்கு வரப்பெற்றுள்ளன. மொத்தம் ரூ.200 கோடி மக்கள் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்க விரும்புபவர்கள் அரசின் சைபர் கிரைம் தொலைபேசி உதவி எண் 1930-ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.” என தெரிவித்தார்.