அதிமுக, பாஜக, தவெக இணந்தாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்களால், நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைந்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயார். நாட்டின் பண்முகத்தன்மையை, கலாச்சாரத்தை தகர்ப்பது மத்திய பாஜக அரசுதான். தமிழகத்தில் இருந்து திரும்பிச் செல்லும் போது, இடதுசாரியின் நல்ல சிந்தனையோடு ஆளுநர் ஆர்.என்.ரவி செல்வார்.
தமிழகத்தில் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது. மனித உயிர்கள் முக்கியம். வழிகாட்டுகின்ற சட்டங்களால் போராடும் மக்களின் உரிமையை பறித்துவிடக் கூடாது. போராட்டத்தால் ஜனநாயகம் சிதைந்துவிடாது. யாராக இருந்தாலும் ரோடு ஷோக்களை நடத்துவது ஏற்புடையதல்ல. ஒரு கட்சியில் இருப்பவர்கள் மற்ற கட்சிக்கு மாறுகின்றனர். தமிழகத்தில் அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை.
நாங்கள் கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பக்கம்தான் இடதுசாரிகள் இருப்போம். இந்திய ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைத்து வருகிறது. ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சியை நடத்துகிறது. இதனை எதிர்த்துப் போராடும் திமுக-வுடன் இணைந்து செயல்படுகிறோம்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கைரேகை, கிளி ஜோதிடம் போல் கூட்டணி ஆட்சியைக் கணிக்க முடியாது. அதிமுக, பாஜக, தவெக இணைந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இம்முறை திமுக கூட்டணியில் எங்களுக்கு கூடுதல் இடங்களை கேட்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.