தமிழகம்

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது | தென் சென்னை மக்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை தடத்தில் மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியது. இதனால் பல முக்கிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும் என தென் சென்னை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில், தினசரி 80-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான 5 கி.மீ. தொலைவை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

          

ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பணிகள் முடங்கின. பின்னர் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, பணிகள் மீண்டும் தொடங்கின. கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணிகள் முடிவடைந்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு இன்று பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வழியாக கடற்கரைக்கு முதல் மின்சார ரயில் சேவை நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த ரயிலில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களும் பயணித்தனர்.

SCROLL FOR NEXT