முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: அதிமுகவில் இருந்து விலகியது ஏன் என்பது குறி்த்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட அத்தனை நெருக்கடி நேரங்களிலும் பொதுச் செயலாளர் பழனிசாமி பின்னால் உறுதியாக நின்றேன்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் என் மீது 43 பொய் வழக்குகள் போடப் பட்டன. இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்கு பரிசாக கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே.
இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும், ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோத்து, அவர்கள் தயவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக்
கண்ணீர் வடிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள் தீய சக்தி திமுகவுடன் எப்படி கைகோக்க முடியும்?
பொதுச்செயலாளர் பழனிசாமி முன்மொழிந்த அந்த சமரச முடிவுக்குத் தான் எதிராக நின்றோமே தவிர, அவரது தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. பழனிசாமியைத் தான் இந்த இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக நாங்கள் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம்.
ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, அவர் எடுத்த அந்த தன்னிச்சையான முடிவுதான் இன்று இந்த இயக்கத்தை அழிவிலும், வேதனையிலும் நிறுத்தியுள்ளது.
பழனிசாமியின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு பலியாக நானும் தொண்டர்களும் தயாராக இல்லை. எனவே, இன்று இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும், மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். ஆனாலும், கரூர் மக்களின் சேவகனாக என் பயணம் என்றும் தொடரும். இவ்வாறு கூறியுள்ளார்.