வைத்திலிங்கம் எம்பி

 
தமிழகம்

புதுச்சேரி | மோடியால் தான் பாகிஸ்தான் பிரச்சினையே வந்தது: வைத்திலிங்கம் எம்பி

அ.முன்னடியான்

புதுச்சேரி: மோடியால் தான் பாகிஸ்தான் பிரச்சினையே வந்தது என்றும், டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு குறித்து முன்பே எப்படி தெரியாமல் போனது என்றும் வைத்திலிங்கம் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது: இன்றைக்கு நகர்ப்புற உச்சவரம்பு, நில உச்சவரம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டனர். வங்கிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டனர். இப்படி இந்திரா காந்தி செய்த எல்லாவற்றையும் தலைகீழாக பாஜக அரசு மாற்றிவிட்டது.

நீதிமன்றம், தேர்தல் துறை என அனைத்து துறைகளிலும் பாஜக சொல்வது தான் நடக்கிறது. ஆனால் அன்றைக்கு இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை கொடுத்தது. இன்றைக்கு பிரதமர் மோடிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு தருமா? வழக்கையே எடுக்காது.

அன்றைக்கு நீதிமன்றத்துக்கு முழுமையான சுதந்திரம் இருந்தது. யாரை எதிர்த்தும் தீர்ப்பு சொல்ல முடியும் என்ற நிலை இருந்தது. தேர்தல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட்டனர். இன்றைக்கு தேர்தல் துறை தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா என்றால் முடியாது. எல்லா சுதந்திரமும் அடிப்பட்டுவிட்டது.

இன்றைக்கு அமித்ஷாவிடம் தான் அவர்கள் சென்று நிற்க வேண்டும். அவர் சொன்னால் தான் உள்ளே செல்ல முடியும். இல்லாவிட்டால் வெளியே தான் செல்ல வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே வருத்தம் தெரிவிக்கும் நிலை இன்றைக்கு இருக்கிறது.

தற்போது எஸ்ஐஆர் பணி நடந்து வருகிறது. 90 சதவீதம் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர். எஸ்ஐஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி மையத்தை உருவாக்கி இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத், ஒவ்வொரு ஊருக்கு என்று உதவி மையம் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் துறை அதனை செய்யவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு மட்டும் உதவி மையம் வைத்துள்ளனர். ஆனால் தேர்தல் வந்தவுடன் வண்டி வைத்துக்கொண்டு வாக்கு போடுங்கள் என்று கூறுவார்கள். கடந்த ஜனவரி மாதம் வாக்காளர் திருத்தப்பணி மேற்கொண்டனர். இப்போது எஸ்ஐஆர் பணி செய்கின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் பாஜகவினர் இங்கு வந்து தங்களது வாக்கை மாற்றி, வாக்கு செலுத்த முடியும்.

இதையெல்லாம் நாம் தட்டிக்கேட்க வேண்டும். தேர்தல் நடத்த வேண்டுமா, வாக்கு போட வேண்டுமா, இதுபோன்ற தேர்தல் வேண்டுமா என்ற மனநிலை எல்லோருக்கும் வந்துள்ளது. இந்த மனநிலையை மக்களிடம் பாஜக உருவாக்கி சர்வாதிகாரத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்

டெல்லி குண்டுவெடிப்பு நடந்தது எப்படி தெரியாமல் போனது. என்ன செய்தீர்கள். இதையெல்லாம் பாகிஸ்தான் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர். சிந்தூர் ஆபரேஷன் நடத்தப்பட்டது. அப்போது இந்திரா காந்தி போன்று அவர்களை சுக்குநூறாக்க வேண்டியது தானே. இந்திரா காந்தி பாகிஸ்தான், பங்களாதேஷ் இரண்டையும் பிரித்தார். ஆனால் இப்போது மோடி பாகிஸ்தான், பங்களாதேஷை இணைக்கின்றார். பேசாதவர்கள் ஒற்றுமையாகின்றனர். பாகிஸ்தானை மூன்றாக உடையுங்கள். அதைவிடுத்து நான் மாவீரன் என்று கூறிகொள்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று பல முறை கூறுகிறார். இல்லை என்று சொல்லக்கூட மோடிக்கு தைரியம் இல்லை. அமெரிக்கா, டிரம்ப் பேரை சொல்லவே மோடி அச்சப்படுகிறார்.

மோடியால் தான் பாகிஸ்தான் பிரச்சினையே நமக்கு வந்தது. இந்திரா காந்திபோன்ற தலைவி இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்றைக்கு இருந்திருக்காது. மோடிக்கு தெரிந்தது அம்பானி, அதானி தான். அவர்களுக்கு வேண்டியதை செய்வது தான் அவரது வேலை. இதனை மாற்ற வேண்டும்.

இந்திரா காந்தி போன்று தலைமை ஏற்கக்கூடிய ராகுல் காந்தி வர வேண்டும். நமக்கான சுதந்திரம் வேண்டும் என்றால் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய காலம் வந்துள்ளது. ஒன்றுபட்டு போராடினால் அடுத்த ஆண்டில் இதே நாளில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதன் பின்னர் அனைவரும் இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT