வைத்திலிங்கம் எம்.பி

 
தமிழகம்

“ஏனாம் மக்களுக்கு நேரடியாக நிவாரணம் சென்றடைய வேண்டும்” - வைத்திலிங்கம் எம்.பி

அ.முன்னடியான்

புதுச்சேரி: புயலால் பாதித்த ஏனாம் மக்களுக்கு இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக நிவாரணம் சென்று சேர வேண்டும் வைத்திலிங்கம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சி.எஸ்.ஆர் நிதி மூலம் ரூ. 70 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் ஆம்புலன்ஸ் ஒன்று புதுச்சேரி அரசுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அது இன்னும் 10 தினங்களுக்குள் வந்துவிடும்.

இதேபோல் 57 ஐசியூ படுக்கைகள் வாங்கி கொடுக்கிறோம். புதுச்சேரி, காரைக்காலுக்கு முதலில் 10 ஆம்புலன்ஸ் வழங்கினோம். அதேபோன்று 5 ஆம்புலன்ஸ்களை தர ஏற்பாடு செய்துள்ளோம். காலாவதியான மருந்து, போலி மருந்து வழக்கில் சம்மந்தப்பட்ட சிபிஐ அதிகாரி ஒருவரை இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

ஆனால், புதுச்சேரியில் அந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. காலாவதியான மருந்து வழக்கில் இரண்டு மருத்துவத்துறை உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்துள்ளனர் என்ற விவரம் இதுவரை வரவில்லை. அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்து மறைக்கிறது.

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான போலி மருந்து வழக்கு, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான காலாவதியான வழக்கு என இவ்விரண்டு வழக்கிலும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகி, இதற்குண்டான விளைவுகளை ஏற்படுத்த இருக்கிறோம். மக்களின் போராட்டமாக மாற்றவும் உள்ளோம்.

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அரசுக்கே பாதுகாப்பு இல்லை. அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பணம் ரூ. 8.5 கோடி திருடு போய் உள்ளது. எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, மாநில அரசு தன்னுடைய பணத்தை இழந்துள்ளதை பார்க்கிறோம். இதேபோல் தனிப்பட்ட நபர்கள் தினமும் ஏமாற்றம் அடைகின்றனர். அதற்குண்டான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

புதுச்சேரியில் தினமும் கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் திட்டமிட்டே நடக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்த தட்டாஞ்சாவடி எம்எல்ஏவே காவல்துறை மீது புகார் கூறுகிறார். அதுபோன்ற நிலைதான் இப்போது இருக்கிறது. காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டது. சட்டம் - ஒழுங்கு கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மழைநீர் தேங்கி கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற நிலையில் குடிசைப்பகுதிகள் இருக்கின்றது.

ஏனாம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர், முதல்வர் யாரும் அங்கு சென்று பார்க்கவில்லை. அங்குள்ள கதாநாயகன் (மல்லாடி கிருஷ்ணாராவ்) தான் பார்க்கிறார். அவருக்கு விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் தான் அவர் நிவாரணம் கொடுப்பார்.

ஏனாமில் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் அங்கு ரூ.150 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக அந்த ரூ.150 கோடி நிவாரணம் மக்களை சென்றடைய வேண்டும்.

நிவாரணத்தை பாதிக்கப்பட்டோர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இதில் தவறு நடக்க அதிக வாய்ப்புள்ளது. தவறு நடக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சென்று சேர வேண்டும்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது பட்டியலின மக்கள் அனைவருக்கும் சமமாக துணிக்கான பணம் கொடுக்கப்படும். ஆனால் இந்தாண்டு சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளனர். இதுபோல் பல குறைபாடுகளை வைத்துக்கொண்டு தீபாவளியை கொண்டாடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று வைத்திலிஙகம் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT