தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப் படம்

 
தமிழகம்

‘3-வது மொழி தேர்வில் தேர்ச்சி அவசியம்’ - சிபிஎஸ்இ உத்தரவை திரும்பப் பெற தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மூன்றாவது மொழி தேர்வில் தேர்ச்சி அவசியம் என்ற சிபிஎஸ்இ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

‘கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு’ எம்.பி முகுல்வாஸ்னிக் தலைமையில் வந்துள்ளது. இக்குழுவில் 30 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று ஆரோவில் சென்று சுற்றிப்பார்த்தனர். இன்று காலை அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அரவிந்தர் சொசைட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், “மத்திய அரசு புதிய, புதிய வடிவங்களில் 3-வது மொழியை கட்டாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறது. 3-வது மொழியை விருப்பம் என்ற பெயரில் அறிமுகம் செய்தனர். ஆனால் இப்போது அதனை தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய நிபந்தனையாக மாற்றுவது மறைமுக மொழி திணிப்பு.

இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் செயல். 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியும் என்ற சுற்றறிக்கையை சிபிஎஸ்இ நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT