மதுரை: மதுரை ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் செப்டம்பர் 28-ம் தேதி திறந்து வைத்தார். இதில் முதல்வர் பாதுகாப்பு கெடுபிடி என்ற பெயரில் காந்தி அறக்கட்டளை நிர்வாகிகளை அனுமதிக்காமல் உரிய முறையில் வழிநடத்த தெரியாத முதல்வர் அலுவலக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில், இந்தியா முழுவதும் காந்தியாரின் நினைவகங்கள், பதிப்பக அலுவலகங்கள் மற்றும் சேவா சங்க அமைப்புக்கு உரிமையான சொத்துக்கள் எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளாக வலதுசாரி கும்பல்களால் வெவ்வேறு வகையான உத்திகளைப் பயன்படுத்திச் சிதைக்கப்பட்டும் சூரையாடப்பட்டும் வருகின்றன. இந்த மோசமான காலத்தில், ரூ.10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுப் புத்தொளி கொண்டுள்ளது மதுரை காந்தி அருங்காட்சியகம்.
இது தற்செயல் அல்ல; நிகழ்கால அரசியலின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. இது குறித்து பதிவாகாமல் விடுபட்டுவிடக்கூடாது, எனவே, இடைத்தேர்தல் பணிகளுக்கிடையிலான பயண அலைச்சலினூடே இதனைப் பதிவு செய்கிறேன். கோட்சேயின் மதவெறி கொடுஞ்செயலால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
துப்பாக்கிக்குண்டு தாங்கி மண்ணில் சரிந்த அந்த மாமனிதரின் குருதி படிந்த ஆடை, மதுரையில் உள்ள அருங்காட்சியகத்தின் கண்ணாடிப் பேழையில் இருக்கிறது. மதுரைக்கு ஐந்து முறை வந்த காந்தி, ஆறாவது முறையாகத் தான் உடுத்திய ஆடையை மட்டும் அனுப்பிவைத்தார். குருதி உறைந்த அந்த ஆடை காந்தியத்தின் கதையை, வரலாற்றை, கொள்கையை என்றென்றும் பேசும்.
அண்ணல் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், “அகில இந்திய காந்தி நினைவு நிதி அறக்கட்டளை” தொடங்கப்பட்டு, அதன் சார்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் துவக்க இந்தியா முழுவதும் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. காந்தி அரையாடைக்கு மாறிய இடம் மதுரை; ஆலய நுழைவுப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறிய இடம் மதுரை. இந்த இரண்டு முக்கிய காரணங்களால் அருங்காட்சியகம் மதுரையில் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அறக்கட்டளைக்குக் கடிதம் எழுதப்பட்டது.
அக்கடிதத்தை எழுதியவர், மதுரை தந்த மாணிக்கங்களில் ஒருவரான மரியாதைக்குரிய செளந்தரம்மாள், அமிர்தா இராமகிருஷ்ணன் ஆவர். இவர்கள் இருவரும் எழுதிய கடிதமும், இக்கோரிக்கையின் பால் என்.எம்.ஆர். சுப்புராமன் எடுத்த தொடர் நடவடிக்கையும் இணைந்தே இதற்குக் காரணமாயின.
காந்தி நினைவு அறக்கட்டளை இந்தியா முழுவதும் 7 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க முடிவெடுத்தது; அதில் ஒன்றாக மதுரை தேர்வானது. 1921-ல் காந்தியார் மதுரைக்கு வந்தபோதுதான் அரையாடைக்கு மாறினார். அப்பொழுது அவர் தங்கியிருந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க முயற்சி செய்யப்பட்டது.
ஆனால், அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்ததால், அதை உடனடியாக அறக்கட்டளைக்கு மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதே சிக்கல்தான் இந்தியா முழுவதும் தேர்வுசெய்யப்பட்ட மற்ற இடங்களுக்கும் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், மதுரை அருங்காட்சியகத்திற்குப் பொருத்தமான இடமாக அன்றைய மாவட்ட ஆட்சியரின் வீடாக இருந்த மங்கம்மாள் மாளிகை தேர்வு செய்யப்பட்டு அறக்கட்டளைக்குத் தெரிவிக்கப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இராணி மங்கம்மாள் கட்டிய கோடைகால மாளிகை அது. பின்னர், பிரிட்டீஷ் ஆட்சியில் ஆட்சியர் வீடாக மாற்றப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னும் ஆட்சியர் வீடாகவே தொடர்ந்தது. அந்த எழிலார்ந்த பிரம்மாண்ட மாளிகையை அருங்காட்சியகப் பயன்பாட்டிற்குத் தர மாநில அரசு முன்வந்தது; அதனை அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்டது.
இந்தியாவின் முதல் காந்தி அருங்காட்சியகம் மதுரையில் உருவானது. 350 ஆண்டுகளாக அதிகாரத்தின் ருசியை மட்டுமே உணர்ந்த ஒரு மாளிகை, அதிகாரத்திற்கு எதிராகப் போராடிய ஒரு மாமனிதரின் நினைவைத் தாங்கி, குருதி ஏந்தி நிற்கும் மாளிகையாக மாறியது.
எந்த அருங்காட்சியகத்தில் காந்தியார் பயன்படுத்திய என்னென்ன பொருட்களை வைப்பது என்பது குறித்து நீண்ட விவாதத்திற்குப் பின் முடிவு செய்யப்பட்டது. அண்ணல் பயன்படுத்திய 14 பொருட்கள் மதுரையில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மதுரை அருங்காட்சியகத்திற்கு காந்தியாரின் குருதி தோய்ந்த கடைசி ஆடையை அனுப்பிவைத்த நேருவின் செயல் வரலாற்றுணர்வு மிக்கது; போற்றுதலுக்குரியது. 1946 முதல் அவர் பயன்படுத்திய கடைசி மூக்குக்கண்ணாடி, பாதடி உள்ளிட்டவையும் மதுரை அருங்காட்சியகத்திற்கு வந்தன.
மிக முக்கியமாக, மகாகவி பாரதி நினைவு மலருக்கு அவர் எழுதிய, “பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம் - மோ.க.காந்தி” என்ற காந்தியின் தமிழ் எழுத்து மற்றும் கையெழுத்தின் மூலப்பிரதி மதுரைக்கு வந்து சேர்ந்தது. அதேபோன்று, “மனிதகுலத்தை ஒரு மிருகத்தனமான நிலைக்குத் தள்ளக்கூடிய போரைத் தடுத்து நிறுத்தக் கோரி” ஹிட்லருக்கு அவர் எழுதிய வரலாற்றுப் புகழ்பெற்ற கடிதத்தின் மூலப்பிரதியும் மதுரை அருங்காட்சியகத்திற்கு வந்தது. அண்ணல் காந்தியாரின் வாழ்வோடு தொடர்புடைய 14 பொருட்களும், 33 மாதிரிப் பொருட்களும் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சமகாலத்தில் இவ்வருங்காட்சியகக் கட்டிடத்தைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டிய தேவை கலை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உருவானது. மோடி ஆட்சிக்காலத்தில் காந்தி நினைவு அறக்கட்டளை சார்ந்த சொத்துக்கள் பல்வேறு வடிவங்களில் சிதைவுக்கும் சூறையாடலுக்கும் உள்ளாகி வருவதை நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.
வாரணாசியில் உள்ள காந்தி அறக்கட்டளை தொடர்புடைய (சர்வசேவா சங்க) பதிப்பக வளாகக் கட்டிடங்கள் இரவோடு இரவாக இடித்துத் தள்ளப்பட்டன. சபர்மதி ஆசிரமத்தின் 5 ஏக்கரைத் தவிர சுற்றியுள்ள 100 ஏக்கரும் வணிகச் சுற்றுலா வகைமையாக மாற்றப்பட்டன.
குஜராத் வித்யா பீடத்திற்கு நிகழ்ந்த சோகக் கதையும் விரிவாக எழுதப்பட வேண்டியது. இப்படி நாடு முழுவதும் காந்தி நினைவு அறக்கட்டளை சொத்துக்கள் மீதும் செயல்பாடுகளின் மீதும் வலதுசாரிகள் தொடுத்துவரும் தாக்குதல்களுக்கு ஒருவகையான எதிர்வினையாக, மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தைப் புதுப்பிக்கும் பணி அமைந்தது.
இந்த முயற்சிக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு செய்து சிறப்பித்த முன்னாள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தபொழுதிலிருந்து அருங்காட்சியகத்தின் மீது அக்கறைகொண்டு, தற்போதைய புதுப்பிக்கும் பணியின் மீதும் தொடர்ந்து கவனம் செலுத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் த. உதயச்சந்திரனுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தைத் தொடங்க மதுரை வருவதையொட்டி, நிறைவுற்றிருந்த காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த முதல்வர் விஜய்க்கும் எனது நன்றி. இதுவும் நம் காலத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ள ஒரு திருப்பணியே.
மதுரை சார்ந்து இயங்கும் எல்லோருக்கும் பெரும் மகிழ்வளிக்கிற பணி இது. தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு காந்தி அருங்காட்சியகமான மதுரை அருங்காட்சியகத்தைக் காண இவ்வளவு கூட்டத்தை இதுவரை பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்குப் பெருங்கூட்டமாக மக்கள் நாளும் வருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இந்நேரத்தில் பாராட்டும், குறையையும் பதிவு செய்வது அவசியமெனக் கருதுகிறேன். பழமையான இக்கட்டிடத்தை அதன் தொன்மைக்கு ஏற்பச் சிறப்பாகப் புனரமைத்துள்ள பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டிடப்பிரிவு சார்ந்த பொறியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள். இதன் திறப்பு விழாவின் போது முதல்வர் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் நான் அவ்விடம் சென்றேன். நான் பெரிதும் மதிக்கும் காந்தி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு நிர்வாகி டி. பாலசுந்தரம் உள்ளிட்டவர்கள் அவ்விடம் இல்லை.
நிகழ்ச்சி முடிந்ததும் விசாரித்தேன். “காந்தி அறக்கட்டளை குழு நிர்வாகிகள் 10 பேர் இருக்கிறீர்கள்; அனைவருக்கும் பாஸ் கொடுக்க முடியாது, மூன்று பேருக்குத்தான் பாஸ் கொடுக்க முடியும் என முதல்வர் அலுவலக அதிகாரிகள் சொல்லிவிட்டதால், நிர்வாகக் குழுவில் உள்ள ஏழு பேரும் பங்கேற்க முடியவில்லை” என்று கேள்விப்பட்டேன்.
என்ன கொடுமை இது! காந்தி அறக்கட்டளை பணிகளுக்காகத் தொடர்ந்து உழைப்பை நல்கிவரும் அப்பெரியவர்களை உரிய முறையில் நடத்தத் தெரியாததற்காக முதல்வர் அலுவலக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். அதிகாரம் என்பது மாண்பை உயர்த்தப் பயன்பட வேண்டுமே தவிர, மாண்புக்குரியவர்களைச் சிறுமைப்படுத்த அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.