சென்னை: இந்திய விமான நிறுவனங்களில் பணிநேர வரம்பு விதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த ஏப்.29-ம் தேதி பணியில் இருந்தபோது கேப்டன் தருண்தீப் சிங் என்ற விமானி உயிரிழந்தார்.
அதற்கு அடுத்த நாளே (ஏப்.30) பெங்களூருவில் கேப்டன் அர்ஜுன் நாயுடு என்ற விமானி, பணியின்போது காலமானார். மிகக் குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்த இந்த மரணங்கள் தற்செயலானது அல்ல.
விமானப் போக்குவரத்து துறையில் நிலவும் முறையற்ற பணி மேலாண்மையையே இது காட்டுகிறது. விமானிகளின் உடல் சோர்வைக் குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணிநேர வரம்பு விதிகள், விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளால் நீர்த்துப் போயுள்ளன.
இடைக்கால நடவடிக்கைகளாக கருதப்பட்ட இந்த சலுகைகள், தற்போது நிரந்தர நடைமுறையாக மாற்றப்பட்டு, விமானிகள் ஓய்வின்றி பணிபுரியும் சூழல் உருவாகியுள்ளது.
விமானிகள் தங்களுக்கு ஏற்படும் சோர்வு குறித்து அளிக்கும் புகார்கள் பெரும்பாலான நிறுவனங்களால் நிராகரிக்கப்படுகின்றன. இது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, விமானப் பணிநேர வரம்பு விதிகளை காலதாமதம் இன்றி அனைத்து நிறுவனங்களிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக பணிநேரச் சலுகைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
விமானிகளின் கட்டாய வாராந்திர ஓய்வு முறையை உறுதி செய்ய வேண்டும். 2 விமானிகளின் மரணம் குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.