காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: “மின்வெட்டுக்கு 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோர்தான் காரணம். தவெக அதற்கு காரணம் அல்ல” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தோர், கட்டப் பஞ்சாயத்து செய்தோர், பணம் வாங்கியோர் குறித்து விசாரித்து, யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு கடந்த ஆட்சியாளர்கள் தான் காரணம் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. பதிவாகிற அனைத்து வழக்குகளும் அரசியல்வாதிகளுக்குத் தெரியும் என்று கூற முடியாது. காவல் துறையைச் சேர்ந்தோருக்கு மட்டுமே தொடர்பு இருக்கலாம்.
தவெகவுக்கு தற்போதைய அரசியல் சூழல் சாதகமாக இருப்பதால், இடைத்தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவர். ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தோருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்ததை ஏற்க முடியாது. தவெகவில் இருக்கும் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
தவெக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், இடைத்தேர்தல் வராமலேயே தடுத்திருக்கலாம். கம்யூனிஸ்ட்டுகள் வெளியிலிருந்து தான் ஆதரவளிப்பதால், அவர்கள் தனித்து முடிவு எடுக்க உரிமை உண்டு.
அவரவர் விரும்பும் உணவை சாப்பிடலாம். ஆனால், அரசு விடுதிகளில் மாட்டிறைச்சி உணவு வழங்கினால், சிலர் பன்றி இறைச்சி உணவு கேட்பர். இதனால், இதுபோன்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு பழைய உணவுகளையே வழங்கலாம்.
அனைத்து அதிகாரத்தையும் சென்னையிலேயே குவிக்க தேவையில்லை. சில துறைகளின் தலைமை அலுவலகத்தை மதுரை, திருச்சி, கோயம்பத்தூர் போன்ற பெரிய மாநகராட்சிகளுக்கு மாற்றலாம். சட்டப்பேரவை கூட்டம், அமைச்சரவை கூட்டத்தை கூட அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் நடத்தலாம்.
தமிழகத்தில் மின்வெட்டுக்கு 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோர் தான் காரணம். அதற்கு தவெக காரணம் அல்ல. அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லாததால் அரசு ஆதரவாக அதிகாரிகள் எழுதி கொடுப்பதை வாசிக்கின்றனர். மின்வெட்டை நியாயப்படுத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. மின் உற்பத்தி, விநியோகத்தில் ஏற்கெனவே உள்ள குளறுபடிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டாலே போதும். இந்த விஷயத்தில் ஏற்கெனவே 50 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
கொலைக் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கொலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து யாரேனும் சாதி சாயம் பூசினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.