தமிழகம்

“ஊழலுக்கு எதிரான யுத்தத்தை முதல்வர் விஜய் தொடங்கி உள்ளார்” - ஜோதிமணி

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: “ஊழலுக்கு எதிரான யுத்தத்தை முதல்வர் விஜய் தொடங்கி உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படாது” என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று (ஜூலை 15) மாலை அணிவித்த கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜரின் நினைவாக லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம்.

கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், யார் லஞ்சம் கேட்டாலும் தரக்கூடாது. நேர்மையான லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தும், அப்படி கட்டாயமாக யாரும் லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறினால் நான் இருக்கின்றேன் பார்த்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான யுத்தத்தை முதல்வர் விஜய் தொடங்கி உள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஆட்சியில் எப்படி ஊழலற்ற லஞ்சமற்ற ஆட்சி இருந்ததோ அதுபோல எளிமையான நேர்மையான காமராஜரின் சித்தாந்தத்தை வலியுறுத்தி இந்த மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதி வாரியாக துண்டறிக்கை விநியோகம் செய்ய உள்ளோம். பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது. யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான எதிர்வினை ஆற்றப்படுகிறது.

சிங்கப்பெண் அதிரடிப் படை தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படாது என்றார்.

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு (காங்கிரஸ்) உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக கையெழுத்து இயக்க பதாகையில் எம்.பி செ.ஜோதிமணி உள்ளிட்டோர் தங்கள் கை அச்சினை பதித்தனர்.

SCROLL FOR NEXT