மலை ரயில் ரத்து

 
தமிழகம்

ஊட்டி, குன்னூரில் கனமழை: 16 இடங்களில் மண் சரிவு; மலை ரயில் ரத்து!

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னூரில் 215 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக தென்பட்ட நிலையில், திடீரென காலநிலை மாறி மழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமானது.

கனமழை

மலை ரயில் பாதையில் ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் முழுவதும் சகதியமாக மாறியது. இதனால் மலை ரயில் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டு, மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

மேலும், மலை ரயிலில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

டிடிகே செல்லும் சாலையில் 60 அடி தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. மண் சரிவால் சாலை மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அடித்து செல்லப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பொக்லின் இயந்திரங்கள் வரவழைத்து சீரமைப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மலை ரயில் பாதையிலும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமாகி முழு மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT