தமிழகம்

வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: டிஎல்எஃப் தரமணி வளாகத்தில், உலகளாவிய திறன் மையத்தை நிறுவுவதற்காக, தமிழக அரசு மற்றும் அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் நிறுவனம் இடையே முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எஃப் டவுண்டவுன் தரமணி வளாகத்தில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் முதல் ஆண்டில் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலையளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகளவில் முன்னணி மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவ னம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை தமிழகத்தில் அமைக்க முன்வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவையை மையமாகக் கொண்டு இம்மையம் அமைய உள்ளது.

ஒப்பந்த நிகழ்வில், தமிழகத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலுள்ள இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதலீட்டாளர்களை முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தலைமைச்செயலர் மு.சாய்குமார், தொழில்துறை செயலர் ச.விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவர் உமாபதி விஸ்வநாதன், அந் நிறுவனத்தின் இயக்குநர் மசூத் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT