பூந்தமல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், பூந்தமல்லி அருகே அகரமேல் ஊராட்சியில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 19-ம் தேதி மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில், இறந்த வாக்காளர்கள, இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் உள்ளிட்ட 6, 19, 777 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில், 3,839 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு, இந்த 4 வாக்கு சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் 3,997 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த பட்டியலில், இறந்தவர்களின் பெயர்,ஒரே பெயரில் இரண்டு முறை பதிவு என 150-க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இருப்பதாக முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.