சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல வாரியாக பொறுப்பு அமைச்சர், மண்டல கண்காணிப்பு அலுவலர்களை முதல்வர் விஜய் நியமித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மற்றும் ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் மு.சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, சேவைத் துறைகளின் உயர் அலுவலர்கள், மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், சென்னை மாநகராட்சி, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் பேசியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மண்டலத்திலும், குறிப்பாக வேளச்சேரி, அம்பத்தூர் சிட்கோ, திருவெற்றியூர், மணலி உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் உயர் அழுத்த மின்மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மழைநீர்த் தேக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணிகள் நடைபெறும் இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைநீர் வடிகால் இணைப்பை உருவாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்வழிக் கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும், மேம்பாட்டுப் பணிகளை அலுவலர்கள் கண்காணித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
வெள்ள மீட்புக்கு தேவையான படகுகளும், அதை இயக்குவோரும் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வெள்ள நிவாரண மையங்கள், சமையல் கூடங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலில் இருந்து வண்டல்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.