தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (அக்.27) மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது.

லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை தெற்கு கேரளா வழியாக சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

28-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், இதர தமிழகத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு படிப்படியாக குறையக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் பதிவான மழை அளவுகளின்படி, திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு, கோவை மாவட்டம் ஒத்தகல்மண்டபம் ஆகிய இடங்களில் தலா 16 செமீ, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 15 செமீ, கோவை மாவட்டம் மதுக்கரை, வாரப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் சனவேலியில் தலா 13 செமீ, தங்கச்சிமடம், சேக்கந்திடல், கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையம், திருப்பூர் மாவட்டம் மடத்துபாளையத்தில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது..

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT