கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் குளிர் காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பனிப் பொழிவால் கடும் குளிர் நிலவுகிறது. பனி மற்றும் மழை பொழிவுக்கு பிறகு, இன்ஃப்ளூயன்சா காய்ச்சல், சுவாச பாதிப்பு, டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பாக்டீரியா தொற்று, சேற்று புண், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவக்கூடும். அதனால், தமிழகம் முழுவதும் நோய் பரவல் அதிகம் உள்ளபகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தப் பரிசோதனைகளை செய்து, நோயின் தன்மை வகைப்படுத்தபடும். உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, அரசு மருத்துவமனை களில் பரிந்துரைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். நோய்களை பரப்பும் கொசுக்கள், லார்வா உற்பத்தியை தடுக்கசிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளையும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.