ஜவாஹிருல்லா

 
தமிழகம்

“5 தொகுதிகள் கேட்டுள்ளோம்; உதயசூரியன் சின்னத்தில் போட்டி” - மமக தலைவர் ஜவாஹிருல்லா

வேட்டையன்

சென்னை: “வரவிருக்கும் தேர்தலில் எங்களுக்கு 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். அதேவேளையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று னிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு சார்ந்த பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.23) மனிதநேய மக்கள் கட்சி உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

கடந்த 2021 தேர்தலில் மணப்பாறை மற்றும் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

          

இந்நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா “இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வியாபித்து இருக்கின்ற மனிதநேய மக்கள் கட்சி நிச்சயம் பாடுபடும் என்பதை மீண்டும் உறுதியாக தெரிவித்தோம்.

சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். இந்த முறை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான். அதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச் சொல்வதாக தெரிவித்துள்ளனர். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்தத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அதையும் நாங்கள் பேசி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT