ஜவாஹிருல்லா | கோப்புப் படம் 
தமிழகம்

5 தொகுதிகள் வேண்டுமாம்... மமக பொதுக்குழு தீர்மானம்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக அக்கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து, மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணி அமைய வேண்டும்;

          

திமுக ஆட்சியில் 2007-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை 5 சதவீதமாக உயர்த்த உரிய சமூக நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்; திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது: சிறுபான்மையினர் நலனுக்காக மேற்கொண்ட திமுகவின் நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மனிதநேய கட்சி தொண்டர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுவார்கள்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவரும் சூழலில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக, இதர கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும்போது, முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

தமிழகம் முழுவதும் வியாபித்து இருக்கும் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. 5 தொகுதிகளை தருவதற்கு திமுக தலைமை நிச்சயமாக பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்பது தமிழகத்துக்கு பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT