மேட்டூர் அடுத்த கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ சதாசிவம்.

 
தமிழகம்

பாமக-வைச் சேர்ந்த 99% பேர் அன்புமணி பக்கம் உள்ளனர்: எம்எல்ஏ சதாசிவம் தகவல்

செய்திப்பிரிவு

பாமக-வைச் சேர்ந்த 99 சதவீதம் பேர் மருத்துவர் அன்புமணி பக்கம் உள்ளனர், என மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தார்.

மேட்டூர் அருகே கொளத்தூரில் சேலம் மேற்கு மாவட்ட பாமக (அன்புமணி) சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மேட்டூர் எம்எல்ஏவும், மேற்கு மாவட்ட செயலாளருமான சதாசிவம், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ சதாசிவம் கூறியதாவது: கட்சியும், சின்னமும், தலைவர் பதவியும் அன்புமணிக்கு தான் அதிகாரம் உண்டு என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். பொதுக்குழு கூடி 2,800 பேர் தலைவராக தேர்ந்தெடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளோம். தலைவர், பொருளாளர், செயலாளர், 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் ராமதாசை திருப்திப்படுத்த தவறாக பேசி வருகின்றனர். பாமக-வைச் சேர்ந்த 99 சதவீதம் பேர் அன்புமணி பக்கம் உள்ளனர். சட்டப்பேரவை குழுத் தலைவராக தருமபுரி எம்எல்ஏ வெங்கடேசன், கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவகுமார், துணைத் தலைவராக என்னையும் தேர்தல் ஆணைய கடிதத்தில் இணைத்து அன்புமணி கொடுத்தார். சபாநாயகர் அப்பாவு அந்த கடிதத்தை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் உள் நோக்கத்தோடு அப்பாவு செயல்படுகிறார். வல்லவராகவும், நல்லவராகவும் பார்த்த நிலையில், வரும் ஜனவரி மாதம் அன்புமணியின் மறு உருவத்தை தமிழகம் பார்க்க இருக்கிறது. பாமக தலைவர் அன்புமணியை ஏளனம் பேசுவதை அருள் எம்எல்ஏ நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

கூட்டணி குறித்து இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும்போது, கட்சியில் இல்லாதவர்கள் பாமக கொடியைபயன்படுத்தக் கூடாது. இதனை மீறி பயன்படுத்தினால் நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்குவோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கொடுக்காத திமுகவினரை ராமதாஸ் அணியினர் ஆதரிக்கின்றனர். அன்புமணி அணியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், என்றார்.

SCROLL FOR NEXT