திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
சென்னை: “மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணி (Reading) சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்,” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்” என்று திமுக ஐடி விங் சார்பில் கருத்து தெரிவித்துள்ளது.
இதனை மேற்கோள் காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணி (Reading) சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.