புதுக்கோட்டை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் சட்டப்பேரவைக்குள் வருவார் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியது: சட்டப்பேரவையில் ‘எங்கே உங்க அப்பாவை காணோம்’ என்று திமுக தலைவரை குறிப்பிட்டு முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். மிக விரைவாக சட்டப்பேரவையில் அவர் பொறுப்பேற்பார். அது உறுதி.
தேர்தலுக்குப் பிறகு திமுகவினர் அமைதியாக இருந்தார்கள். ஆனால், முதல்வரின் இத்தகைய பேச்சுக்குப் பிறகு இனி விட மாட்டார்கள் என்றார். முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: சட்டப்பேரவையை படப்பிடிப்புக்கான ஸ்டுடியோ போல நினைத்து நடந்து கொள்கின்றனர். முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அரசியலிலும் இது போன்று நடிப்பதற்காக வந்திருக்கிறார் என்றால், தமிழகத்தின் நிலைமையை எண்ணி வருத்தப்படும் சூழ்நிலை உள்ளது என்றார்.