முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொது அமைப்பின் பங்குதாரர்கள்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 – 2027 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “முன்னாள் முதல்வர் அண்ணா, தனது இறுதி உயிர் போல எழுதியது தான் மாநில சுயாட்சி கொள்கை. அவரது மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக கருணாநிதி வடிவமைத்து கொடுத்தார்.
மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை சட்டப்பேரவையில் வைக்க இருக்கிறோம். ஒன்றிய அரசிடம் இருந்து உரிமைகளை பெற இன்னமும் போராடும் நிலை உள்ளது; எல்லாவற்றுக்கும் மாநில அரசுகள் ஒன்றியத்தின் தயவை எதிர்பார்த்துள்ள நிலைதான் உள்ளது.
அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு மாநில அரசுகளை மதிப்பது இல்லை. இன்னும் எத்தனை காலங்கள் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது. அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்.
மாநில சுயாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி மலர வேண்டும். இது தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல, இந்திய மக்களின் வாழ்வியல் கோரிக்கை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சி தான் அடிப்படை. இதைத் தான் அந்த அறிக்கையும் நிறுவுகிறது. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே, நாம் முயன்றால் மீண்டும் திருத்த முடியும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் முயற்சியைத் தொடங்க வேண்டும். அதிகாரமும் வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது, பரவலாக வேண்டும். கூட்டாட்சி தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பை மாற்றுவது மத்திய அரசை பலவீனப்படுத்தாது என்று அறிக்கை கூறுகிறது. ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுப்பது, ஜி.எஸ்.டி இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அதிகாரங்களை கபளீகரம் செய்கிறது மத்திய அரசு.
மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள். எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசும் மாநில அரசும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொது அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் மத்திய அரசு வளரும். மாநில சுயாட்சிக்கான முன்னெடுப்பை நாம்தான் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் செய்ய யாரும் இல்லை. இது வரலாறு வழங்கி இருக்கும் வாய்ப்பு” இவ்வாறு முதல்வர் பேசினார்.