விருதுநகர்: ‘பாகுபலி’ படத்தில், “விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா” என்றொரு வசனம் இருக்கும். அதுபோல், “துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்” என்று விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவை போல் சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல் அவதூறுகளையும், தரம் தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பரப்புரை செய்கிறார் பழனிசாமி. பழனிசாமி என்று சொன்னால் அது பொய், பித்தலாட்டம் என்றுதான் பொருளாகும். ‘பழனிசாமி சொன்ன பொய்கள்’ என்று, ஒரு புத்தகமே போடலாம்! அந்த அளவுக்கு பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியை பற்றி, பச்சை பொய்யை பேசிய பழனிசாமிக்கு, நான் நெல்லையில் பதிலடி கொடுத்திருக்கிறேன்.
சங்கி கூட்டணியில் சேர்ந்ததால் அவர்களை போலவே வாட்ஸ் அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். காமராஜர் மறைவுற்ற போது, சொந்த மகனை போல் உடனிருந்து இறுதி நிகழ்வுகளை செய்தவர் கருணாநிதி. இது வரலாறு!
பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால், அந்த காலத்திலேயே இது சர்ச்சையாகி இருக்கும். பத்திரிகைகளில் செய்தியாகி இருக்கும். ஆனால், அப்படி எதுவுமே இல்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கருணாநிதியை புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.
முந்தாநாள் அடித்த காற்றில் முதல்வராகி, மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? தப்பு செய்தால் வருத்தம் தெரிவிப்பதுதான் நல்ல மனிதருக்கான இலக்கணம். அதைவிட்டுவிட்டு, மேலும் மேலும் பொய்களை சொன்னால், பழனிசாமி இன்னும் அசிங்கப்பட்டுத்தான் போவார்.
இப்போது புதிதாக இன்னொரு பொய்யை சேர்த்திருக்கிறார்! ”அரசு ஊழியர்களை ஆசை வார்த்தை காட்டி, திமுக அரசு ஏமாற்றிவிட்டது!” என பழனிசாமி பேசியிருக்கிறார்.
நிறைவேற்றவே முடியாது என்று சொன்னதை நாம் செய்துவிட்டோம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடுப்பில், பழனிசாமி இப்படி எல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு தரும் ஊதியத்தையும் இழிவுபடுத்தி பேசிய பழனிசாமிக்கு அவர்களிடம் இருந்து, ஸ்வீட்டும் கிடைக்காது! அவர்களின் ஓட்டும் கிடைக்காது! இதுதான் உண்மை.
அரசு ஊழியர்களுக்கு மட்டுமா துரோகம் செய்தார்! பழனிசாமி துரோகம் பண்ணாத தரப்பே தமிழ்நாட்டில் இருக்க முடியாது! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து உழவர்களுக்கு துரோகம்! பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து, பெண்களுக்கு துரோகம்! குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று பாஜகவின் எல்லா சட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து சிறுபான்மை சமூகத்திற்கு துரோகம்! செய்தார்.
கட்சியில் அவரை வளர்த்துவிட்ட, செங்கோட்டையனுக்கு துரோகம், பதவி கொடுத்த சசிகலா, தினகரனுக்கும் துரோகம், ஓபிஎஸ்-க்கு துரோகம், உங்கள் ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சட்டப்பேரவையின் தலைவர் தனபாலுக்கே சீட்டு கொடுக்காமல் துரோகம், எல்லாவற்றிற்கும் மேல், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவுக்கு, அதே பாஜகவுடன் கூட்டணி வைத்து துரோகம். இப்போது நான் சொன்ன துரோகத்தை உங்களால் எண்ண முடிந்ததா? பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம். ஏற்கெனவே “பத்து, அடுத்தது 11”!
பாகுபலி படத்தில் சத்தியராஜை பார்த்து சொல்வது மாதிரி ஒரு டயலாக் வரும். “விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா” அப்படி ஒரு வசனம் இருக்கும். அதுபோல், துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்! இப்படி, தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்த பழனிசாமி பேசுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்?
நம்முடைய தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாரை களத்தில் இறக்கிவிட்டு, நான் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேல், பெண்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவது மாதிரி ஒரு அல்டிமேட் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம்.
இல்லத்தரசி திட்டம்! எட்டாயிரம் ரூபாய் கூப்பன்! எதற்கான கூப்பன்? இல்லத்தரசிகளான நீங்கள் உங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருளை, உங்கள் ஊரில், உங்களுக்கு விருப்பமான கடையில், உங்களுக்கு பிடித்த மாதிரி வாங்கிக் கொள்வதற்கான கூப்பன்! புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம். பழையவற்றைக் கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சும் செய்து கொள்ளலாம். என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும், எந்த கடை, என்ன கலர் எல்லாமே உங்களின் சாய்ஸ்தான்! இந்தப் கூப்பனை கொடுத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். என்னை பொறுத்தவரை நம்முடைய குடும்பத் தலைவிகளின் வீட்டு வேலை சுமை பெருமளவு குறைய வேண்டும். அதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்!
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பற்றித்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர்தான் சோகமாக இருக்கிறார். யார் அவர்? அவர்தான் பழனிசாமி! இல்லத்தரசி திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு, “இதில் தி.மு.க.காரர்கள் கமிஷன் அடிப்பார்கள்” என்று அடிப்படையே இல்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். பணத்திற்கு பதிலாக கூப்பன் தருகிறோம். மக்கள் கடையில் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ளப போகிறார்கள். இதில் எங்கே ஊழலும், கமிஷனும் வந்தது? தன்னைப்போன்றே பழனிசாமி எல்லோரையும் நினைத்துவிட்டார். எது எப்படியோ, இல்லத்தரசி அறிவிப்பால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இப்போது பியூஸ் போன சாமி ஆகிவிட்டார்!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு தரப்பினரையும் மனதில் வைத்து தேர்தல் அறிக்கையை தயார் செய்திருக்கிறோம். எப்படிப்பட்ட அறிக்கை இது? ஆறில் இருந்து அறுபது வரை, பெண்கள் முதல் ஆண்கள் வரை, இளைஞர்கள் முதல் முதியோர் வரை திமுக தேர்தல் அறிக்கை எல்லோருக்கும் பிடிக்கும்! பிடிக்காதவர்களே இருக்க முடியாது! அதனால்தான் இதை ‘2026 தேர்தல் களத்தின் சூப்பர்ஸ்டார்’ என்று சொல்லி நான் அறிமுகப்படுத்தினேன்.
வாக்குறுதியை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தி.மு.க. கொடுக்கும் வாக்குறுதியைதான் மக்கள் நம்புகிறார்கள்! மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. யார் சொல்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதற்கான மதிப்பும்.
என்.டி.ஏ–வைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டிற்கு எதிராக எல்லா வேலையும் பார்த்துக்கொண்டு, தேர்தல் வந்தால் தமிழ் மேல் பாசம் இருப்பது மாதிரியும், காமராஜர், எம்.ஜி.ஆர். மாதிரி தலைவர்களை சொந்தம் கொண்டாடவும் புறப்பட்டுவிடுகிறார்கள்.
இப்படிபட்ட தமிழின விரோதிகளுடன் பழனிசாமி கூட்டணி வைத்திருக்கிறார். பாஜகவின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதுதான்! NDA ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்தால் என்ன ஆகும் என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியது கூட இல்லை. இந்தியா முழுவதும் பாஜக புகுந்த மாநிலங்கள் என்ன கதியில் இருக்கிறது? பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த தலைவர்களும், கட்சிகளும் என்ன ஆனார்கள் என்று பார்த்தாலே நமக்கு பதில் கிடைத்துவிடும்!
நாம் இப்போது போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; ஒரு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, விருதுநகர் மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்கிறேன்.
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம். நாடு வளம் பெற நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், அருப்புக்கோட்டை வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், திருச்சுழி வேட்பளர் தங்கம்தென்னரசு, அருப்புக்கோட்டை வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் வேட்பாளர் கடற்கரைராஜ், ராஜபாளையம் வேட்பாளர் தங்கப்பாண்டியன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகாலிங்கம், தென்காசி எம்.பி. ராணி, சீனிவாசன் எம்,எல்.ஏ. முன்னாள் எம்பி தனுஷ் குமார் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.