சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தொகையை தங்கள் கட்சி அறிவித்தபடி ரூ.2,500 என்று உயர்த்தி வழங்க கால அவகாசம் தேவை என்றும், மே மாதத்துக்கான தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் கூறிய நிலையில், அதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்போது எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று நேற்றுதானே சட்டப்பேரவையிலயே சொன்னீர்கள்? மாதம் ரூ.2,500 என்று சொல்லிட்டு, 1,000 ரூபாய் கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?” என்று காட்டமாக வினவியுள்ளார் ஸ்டாலின்.
முன்னதாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மே 2026 மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரூ.2,500 தருவோம் என்று சொல்லிவிட்டு ரூ.1000-க்கே இழுத்தடிப்பதா என்று ஸ்டாலின் வினவியுள்ளார்.
இதற்கிடையில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததுபோலவே கல்லூரி மாணவ / மாணவிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை இன்று காலை வரவு வைக்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்தது அப்போதைய திமுக அரசு. அது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் கோடை கால சிறப்புத் தொகை என விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
அதேபோல், அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் தற்போது மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர தொகை, ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
அந்த வரிசையில் தவெக தனது தேர்தல் அறிக்கையில் 65 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்றது. இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.