சென்னை: புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என்று இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக. 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ‘இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதியுள்ளதைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தின்போது, நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டிப்பதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்திய கம்யூ. கண்டனம்:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக ஒன்றிய அரசு இந்தித் திணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, அதன் முகப்பு நுழைவாயிலில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழி எழுத்துகளிலும் ‘கர்தவ்ய த்வார்’ என்ற இந்தி வார்த்தை எழுதப்பட்டுள்ளது.
திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் இந்த இந்தி மொழித் திணிப்பு நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் அந்தந்த இரயில் நிலையங்கள், சந்திப்புகள் என எல்லா இடங்களிலும் எழுதியுள்ள நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் இந்தி வார்த்தையை தமிழ் மற்றும் ஆங்கில மொழி வடிவில் எழுதியிருப்பது அப்பட்டமான இந்தி மொழித் திணிப்பாகும்.
திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் உடனடியாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள இந்தி வார்த்தை வடிவத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதில் அலட்சியம் காட்டப்படுமானால் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, பொதுமக்களை திரட்டி, நேரடிப் போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரிக்கிறது” என்று கூறியுள்ளார்.