முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பாஜக அமைச்சர்களும், பாஜக முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? "தமிழ் மண்ணில் நின்று, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறுவீர்களா?, நிதி ஒதுக்கீட்டில் நீதி கிடைக்குமா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக தேர்தலை ஒட்டி பிரதமர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வரை பிரச்சாரத்துக்காக வந்து செல்லும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பாஜக அமைச்சர்களும், பாஜக முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? தமிழ் மண்ணில் நின்று, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பாஜகவால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?.
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
இவற்றுக்கெல்லாம், பழனிசாமி தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா? . கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெளிநாட்டு நிதி நடைமுறையை கடுமையாக்க வெளிநாட்டு நிதி திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த மாதம் 25-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கிறிஸ்துவ அமைப்புகள் கடும் கண்டம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை கட்டுப்படுத்த அல்லது அவற்றை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது போன்ற சட்டப்பிரிவுகள் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தும் மற்றும் நிர்வாக ரீதியான வரம்பு மீறலுக்கு வழிவகுக்கும் என அகில இந்திய கத்தோலிக்க யூனியன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.