முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

“ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, டெல்லி காற்று மாசு...” - மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் சரமாரி தாக்கு

தமிழினி

சென்னை: “பாஜக ஆதரவாளர்களே ஒன்றிய அரசை கழுவி ஊத்துகிறார்கள். பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிமுக அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.27) கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் என்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் வளர வேண்டும் என்று உழைக்கிறோம். ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டியால் வரி உரிமை இல்லை.

நமக்கு வரவேண்டிய நிதியும் வழங்கவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகின்ற துரோகிகள். துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறியிருக்கிறோம்.

இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களை கூச செய்கிறது. வயிறு எறிகிறது. அதனால் தான், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள, ஒன்றிய அமைச்சர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, அத்தனை வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள். தமிழ்நாட்டு மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதுமூலமாக, வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் நினைப்பது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது? தமிழ்நாட்டைப் பற்றி இப்படி பேசுகிறார்களே ஏன் என்று, வடமாநில யூடியூபர்கள் தேடி பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை , சாதனை திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை தெரிந்து கொண்டு, நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். வளர்ச்சி தொடர்பான எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்கு பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாஜக ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊத்துகிறார்கள். ‘எத்தனால்’ கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கும் மாசடைந்த காற்று, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பாஜக அரசுகள் கட்டுகின்ற கட்டடங்கள், சிலைகள், மேம்பாலங்கள் எல்லாம் சிறிது நாட்களிலேயே இடிந்து விழுகிறது.

தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் இருந்த பாஜககாரங்களே இப்போது இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சில பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரி செய்கின்ற முதல்வர்தான் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின். ஆனால், ஒன்றிய பாஜக அரசு எந்தக் கோரிக்கையையும் கண்டு கொள்வதில்லை. எந்த விமர்சனத்தையும் நியாயத்துடன் பார்ப்பது இல்லை.

வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் நூறு நாள் வேலைத்திட்டம் பெரிய சாதனையை படைத்தது. ஆனால், இப்போது பாஜக அந்த திட்டத்தில் காந்தியடிகளின் பேரையும் எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும் தூக்கிவிட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக சிதைத்துவிட்டு வந்த இந்த திட்டத்தை, இப்போது மொத்தமாக நீக்கிவிட்டார்கள். இதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் அவர்கள் கவனிக்கிறார்களா என்றால், இல்லை. தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல், ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் கட்சியும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

இப்படியாக, ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் - அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிமுக அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களுடைய எந்த பொய்யையும், மக்களான நீங்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி. திமுக அரசின் நலத்திட்டங்களால், பயனடையாத ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு திமுக அரசு செயல்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT