தமிழகம்

"எட்டப்பர்கள் அல்ல, கட்டபொம்மன்கள்" - ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதில்

டெக்ஸ்டர்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் தான் சென்னை வரவுள்ளதாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மசோதாக்களுக்கு எதிராக செயல்படுமாறு ஸ்டாலின் மற்றும் திமுகவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்க உள்ளோம். 

850 இடங்களாக விரிவாக்கம் செய்வது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றி வரைய பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு அது வரம்பற்ற இடத்தைக் கொடுக்கும். 

தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் ஒரு பாறை போல் நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாம் இந்த மசோதாவை ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்” இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: “அரசியலமைப்புச் சட்டத்தையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்கை அங்கீகரித்தமைக்குச் சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி.

தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் நலன்களையே எப்போதும் முதன்மையான கருத்தாகக் கொண்டு ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறோம். இந்தப் பாதையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்; வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க ஆதரவு கேட்பதற்காக இண்டியா கூட்டணியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இன்று சென்னை வர உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT