கோப்புப் படம்

 
தமிழகம்

ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இணைந்து செயல்பட ராகுல் காந்தி அழைப்பு

மோகன் கணபதி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் வாழ வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா எனும் கருத்தாக்கம், அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் காப்பதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாடு ஆகியவை தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான இந்த போராட்டத்தில் நாம் இணைந்து நின்று, வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து தவெக வெற்றி பெற்றதை அடுத்து கடந்த மே 6-ம் தேதி காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைத்தது. மேலும், தமிழக அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. மேலும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் காங்கிரஸ் - தவெக கூட்டணி இணைந்து செயல்படும் என்றும் அக்கட்சி தெரிவித்திருந்தது.

திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பிறகு அணி மாறியதற்காக திமுக, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகிறது. திமுகவின் முதுகில் காங்கிரஸ் கட்சி குத்திவிட்டதாகவும், இனி ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் விரிசல் அதிகரித்திருந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியும், ராகுல் காந்தியின் நன்றி தெரிவிக்கும் செய்தியும் நிலைமையை தணிப்பதற்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT