சென்னை: “வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை” என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்பதியாக வாழ்த்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னால், முதல் பேட்டியில் பத்திரிகை நிருபர்களிடம் ‘வாக்களித்தவர்கள் மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும். அந்தப் பணியை நான் நிறைவேற்றுவேன்’ என்று சொன்னேன்.
ஆனால் இன்றைய நிலை, ‘வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’. அதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நிலை, விலைவாசி உயர்வு, நிர்வாகம் சீர்குலைவு, பாலியல் குற்றங்கள் தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. தினமும் பத்திரிகை, தொலைக்காட்சிகள், சோஷியல் மீடியாவில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம் என்று செய்தி இல்லாத நாளே இல்லை.
கடந்த ஐந்து, ஆறு நாட்களாக குழந்தைகள் கடத்தல் செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மின்தடை, ‘சிங்கப்பெண்’ என்று ஒரு படையை உருவாக்கினார்கள், அந்த சிங்கப்பெண் படையைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டிய நிலைதான் நாட்டில் உருவாகி இருக்கிறது.
நான் சில நாட்களுக்கு முன்பு சொன்னேன், இன்றைய தினம் முதல்வராக இருக்கக்கூடியவர், “இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி” என்று சொன்னார். நான் “இல்லை, இல்லை; மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி” என்று சொன்னேன். அது இன்றைக்கு மாறி, பாலியல் வன்கொடுமையா? போதைப் பொருள் நடமாட்டமா? என்று, அந்த இரண்டுக்கும் இடையே தான் இன்றைக்கு போட்டி ஏற்பட்டிருக்கிறது.
மேடைக்கு மேடை ‘தீய சக்தி, தீய சக்தி’ என்ற புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.