இபிஎஸ்
சென்னை: மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?” என்று வினவியுள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்று, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி இது தான் திமுக ஆட்சிக் காலம்.
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான பொறுப்பு இல்லாத, என்ன நடக்கிறது என்று சிந்தனையே இல்லாத ஒரு டம்மி முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான். தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
‘அடுத்து மலரப்போகும் ஆட்சியில்...’
அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தலைநகர் சென்னை தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றிவிட்டன.
எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்து மலரப்போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தை மக்களிடம் அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.