மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற எம்எல்ஏக்கள்.
மாமல்லபுரம்: எம்எல்ஏக்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தின் கீழ் 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 30 உறுப்பினர்களுக்கான முதலாவது பயிற்சி முகாம் நேற்று, இன்று (அக்.28) என 2 நாட்களாக நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மேகாலயா அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் இந்த பயிற்சி முகாமை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களைச் செய்துள்ளனர்.
ஆதாரங்களின் அடிப்படையிலேயே தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் ஒட்டு வேலைகளுக்காக மட்டுமே ரூ.2 ஆயிரம் கோடி டெண்டர் போடப்பட்டு பலருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் அவசர, அவசரமாக பல்வேறு டெண்டர்கள் போடப்பட்டுள்ளன. டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில், நெடுஞ்சாலைத் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
இது மட்டுமல்ல, பல துறைகளிலும் அமைச்சர்கள் பல்வேறு வழிகளில் முறைகேடுகளை செய்துள்ளனர். விரைவில் ஒவ்வொரு துறையாக ஊழல் குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, துறைவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.