தமிழகம்

“முதல்வருக்கு அவகாசம் கொடுங்கள்” - தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் வேண்டுகோள்

தமிழினி

சென்னை: “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு அவகாசம் கொடுங்கள்,” என அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பழைய முறையில் வருகைப் பதிவை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் சுமுகத்தேர்வு காணப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் உறுதியளித்திருந்தார்.

இருப்பினும் “முதல்வர் எங்களை சந்திக்கும் வரை, எங்கள் கோரிக்கையை கேட்கும் வரை போராட்டம் தொடரும்,” என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் 16-வது நாளான இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், “உங்களை சந்தித்து உங்கள் கோரிக்கையை கேட்குமாறு முதல்வர் எங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் ஏழை எளிய மக்களுடன் இருக்கும் மக்கள் முதல்வர். அவர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பது உங்கள் முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது. உங்கள் கோரிக்கை நியாயமானது. இப்போது நிதிநிலை மோசமாக இருக்கிறது. நிதி நிலையை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.” என்றார்.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசும்போது, “இது உங்கள் அரசு. உங்களை இவ்வளவு வருத்திக் கொள்ள வேண்டாம். என்னென்ன முடியுமோ அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றும்,” என்றார்.

அமைச்சர் ராஜ் மோகன் பேசும்போது, “நாங்கள் இங்கு அமைச்சராக வரவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் இங்கு நிற்கிறோம். இத்தனை நாட்கள் அற வழியில் போராடிய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். போராடுவது உங்கள் உரிமை. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது எங்கள் கடமை,” என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பிறகு அவர் அளித்த வாக்குறுதிகளை, எவையெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆட்சியில் பல துறைகளில் எல்லாமே வெளி முகமை மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை உடனே மாற்ற முடியாது.

கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார். இந்த நூறு நாட்களில் முதல்வர் விஜய் முதல்வர் குடும்ப ஊழலை ஒழித்துள்ளார். சென்னை அழகாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்,” என கோரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT