அமைச்சர் விஸ்வநாதன்

 
தமிழகம்

“பேரவையில் காமராஜர் குறித்து பேசியபோது திமுகவினர் கேலி” - அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம்

துரை விஜயராஜ்

சென்னை: “சட்டப்பேரவையில் காமராஜர் குறித்து பேசியபோது திமுகவினர் கேலி செய்தனர்” என அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக்கு வெளியே உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நீட் தேர்வுக்கு எதிராக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்துக்கு (எஃப்சிஆர்ஏ) எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தனித் தீர்மானத்தையும் காங்கிரஸ் கட்சி முழுமையாக வரவேற்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வைத் தமிழக காங்கிரஸ் தொடர்ந்து தனித்து எதிர்த்து வருகிறது. அதேபோல், எஃப்சிஆர்ஏ சட்டத்துக்கு எதிராகவும் எங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிஜேபி சார்பில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுடன் அவர் நடத்திய கலந்துரையாடல்கள் மூலம் நீட் குளறுபடிகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறார். இதைப் பற்றித்தான் சட்டப்பேரவையில் நான் தனி நபர் தீர்மானத்தின் போது பேசினேன்.

சட்டப்பேரவை விவாதத்தின் போது பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நான் குறிப்பிட்டபோது, திமுக எம்எல்ஏ-க்கள் அதைக் கேலி செய்ததோடு, கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

1967-க்கு முன்பாகவே காமராஜரைப் பற்றி அவதூறான கேலிச் சித்திரங்களை வரைவதும், அவர் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்வதும் திமுகவின் வாடிக்கையாக இருந்தது.

அதே போன்றதொரு போக்கை இப்போதும் நான் பார்க்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்திருக்கும் இந்த கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு உயர்கல்வித்துறை அமைச்சர், காமராஜரைப் பற்றிப் பேசும்போது திமுக முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT