வேளாண் துறை அமைச்சர் வினோத்
சென்னை: வேளாண் துறை செயலர் பொ.சங்கர் மற்றும் வேளாண் துறை இயக்குநர் முரளிதரன், தோட்டக் கலைத் துறை இயக்குநர் விஜயாராணி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பட்ஜெட் அம்சங்கள் தொடர்பாக அமைச்சர் ஆர்.வினோத் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஏற்கெனவே வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தி, கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் கரும்பு, நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்த வேண்டும், குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். இனி ஒரு பிடி நெல் கூட மழையில் நனையாதபடி நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.
அமைச்சர் வினோத் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் பனை மரம் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவித்தல், சொந்த விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயி குடும்பத்துக்கும் விதைப்பு கால நிதி ரூ.15 ஆயிரம் 2 தவணையாக வழங்குதல், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் உரிமை அட்டை வழங்குவது, ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் நேரடி வங்கி கணக்கில் உதவி தொகையாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதார விலையை நிர்ணயம் செய்தல், சந்தையில் சரிவு ஏற்படும் போது அதை அரசு ஏற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.