சென்னை: “ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் திட்டமில்லை. ஆன்லைன் மூலம் மதுபாதன பதிவு என்பது பரிசோதனை நிலையில்தான் உள்ளது. மதுவை டோர் டெலிவரி செய்ய இது அவ்வளவு அத்தியாவசியமா என்ன?” என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வீடு தேடி மதுபானம் வரும் என்று சொல்வது தவறு. ஆன்லைன் மூலம் மதுபான பதிவு என்பது பரிசோதனை நிலையில்தான் உள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் திட்டமில்லை. மது பானத்துக்கு முன்பதிவு மட்டுமே செய்யப்படும். மதுபானத்தை டோர் டெலிவரி செய்ய இது அவ்வளவு அத்தியாவசியமா என்ன?
ஆன்லைன் முன்பதிவு என்பது சோதனை அடிப்படையில் நடக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும், நேரில் சென்றுதான் வாங்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் எந்த வகை மதுபானம் இருக்கிறது என்பதை ஆன்லைனின் பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது மதுபான ஆலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள முடியும். இவை முழுவதும் வெளிப்படை தன்மையிடன் இருக்கும். ஒரு துறையை சீரமைக்கும்போது, குறையிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அரசியல் நீதியாக எதையும் சொல்லவேண்டாம்.
ஒரு திட்டம் வரும்போது, அதற்கு எதிர்ப்புகள் அதிகமாக வரும். இருந்தாலும் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அரசு உள்வாங்கி கொண்டிருக்கிறது.
மதுபான விலைகள் உயராது. மதுவை விற்று அரசின் வருவாயை பெருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை தடுப்பதற்கு இது நல்ல தீர்வு. ஆனால், இதை தவறாக சித்தரிக்கிறார்கள். இது குறித்த வீடியோ, எங்கள் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏதோ ஒரு வழியில் பரப்பிவிட்டனர்.
இந்த துறையில் நடந்த ஊழல்களை கண்டறிந்து சரி செய்தாலே, அரசுக்கான வருவாய் அதிகரிக்கும். மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினை பல ஆண்டுகளாக இருக்கிறது. இதை சரிசெய்ய முந்தைய ஆட்சி காலத்தில் யாரும் முன்வரவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.