சென்னை: காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில் பெறப்படும் ரூ.10 தனி நபர்களுக்கு செல்வதைத் தடுத்து அரசுக்கு வரவைக்கவே எம்ஆர்பி விலையில் அதிகாரப்பூர்வமாக ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாஸ்மாக் நிர்வாகம் மதுபான விலையை ரூ.10 உயர்த்தியுள்ளதாக சில செய்தி நிறுவனங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து சொன்னது வருத்தமாக இருந்தது.
இதற்குமுன்பு ஒரு மது பாட்டிலின் விலை ரூ.140 என்றால், அதற்கு ரூ.10 அதிகமாகப் பெறப்பட்டு, மது பாட்டிலை திரும்பக் கொடுத்தால் ரூ.10 தரப்படும் என வசூலித்தார்கள். அரசு கணக்கில் வராமல் பணம் வசூலிப்பது தவறு.
எந்தப் பணமாக இருந்தாலும் வரவு செலவு அரசு மூலமாகத்தான் இருக்க வேண்டும், தனிநபர் கைகளுக்குச் செல்லக்கூடாது என்ற நோக்கில் இப்போது ரூ.10, சுற்றுச்சூழல் செஸ் ஆக போடப்பட்டுள்ளது.
இனி ஒரு பாட்டிலுக்கு ரூ.150 என்றால் ரூ.150-ம் கணக்கில் இருக்கும். பாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 சம்பந்தப்பட்டவர்களின் கைகளில் கொடுக்கப்படும்.
கடந்த திமுக ஆட்சியில் 99 சதவீதம் மது பாட்டில்கள் திரும்ப வந்ததாகச் சொன்னார்கள். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் 3 கடைகளில் சோதனை செய்தோம். அதில் 40 சதவீதம் பாட்டில்கள் திரும்ப வரவில்லை.
அந்தப் பாட்டில்களுக்காக வசூலிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,600 கோடி எங்கே சென்றது என்று தெரியவில்லை. இது அரசுக்கு வரவேண்டும் என்றுதான் புதிய முறையைக் கொண்டு வந்துள்ளோம்.
ஒரு மாவட்டத்தில் வாங்கிய மது பாட்டிலை மற்றொரு மாவட்டத்தில் திருப்பிக் கொடுத்தாலும் ரூ.10 வாங்கிக் கொள்ளலாம் என்று நடைமுறையைக் கொண்டுவர உள்ளோம் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.