கோப்புப் படம் 

 
தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் தகவல்

தமிழினி

சென்னை: “டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இது அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “டாஸ்மாக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இது அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்சினை தொடருகிறது. பாட்டிலுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். ஊழியர்களின் பிரச்சினையை படிப்படியாக தீர்க்கவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் துணை விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.17,925 ஆகவும், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர் சம்பளம் ரூ.22,313 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதுவரை, இந்த துறையில், இப்படியொரு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதில்லை. ஊதிய உயர்வு மூலம் ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகிறது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ வசதி என்ற கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு சொன்ன விலைக்கு தான் மதுபானங்களை விற்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் இது.

21 வயதுக்கு உட்பட்டோரை பப் உள்ளிட்டவற்றில் அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும். இது கடுமையான எச்சரிக்கை. அந்த நிறுவனங்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

ஊதிய உயர்வால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயராது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். டாஸ்மாக் துறையை சீர்படுத்த இருக்கிறோம். இந்த துறையில் ஒவ்வொன்றாக சீர்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT