தமிழகம்

பஞ்சமி நிலங்களை கண்டறிய விரைவில் ஆணையம்: அமைச்சர் வன்னியரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் இருந்த பஞ்சமி நிலம் தற்போது 1.86 லட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. எனவே பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஆணையம் அமைக்கப்படும்’ என்று சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் க.மாரிமுத்து, தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க தனி வாரியம் அமைக்க முன்வர வேண்டும் என்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தைக்கொண்டு வந்தார்.

அதற்கு பதில் அளித்து சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு பேசியதாவது: முதல்வர் உரையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் கலப்புமணம் செய்வதும் ஒரு காரணம் என்று தெரிவித்தார். இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சமி நிலம் தொடர்பாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1891-ம் ஆண்டில் ஆட்சியராக இருந்த த்ரமென் கீர் என்பவர்தான் அந்த நிலங்களை கண்டறிந்தார். தமிழகத்தில் தலித்துகள், ஆதிதிரா விட மக்கள் மிக மோசமான நிலையிலும், நிலமற்றவர்களா கவும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்று நிலம் வேண்டும் என, இங்கிலாந்து மகாராணிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் 2 அரசாணைகள் பிறப்பிக்கப்படுகிறது.

அந்த அரசாணைகளில் 12 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை ஆதிதிராவிட மக்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நிலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து அந்த நிலத்தை அவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையும் இருக்கிறது.

இந்த அடிப்படையில்தான் பஞ்சமி நிலம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் என்பது பட்டியல் சாதி. அதில் 76 சாதிகள் உள்ளன. அந்த அடிப்படையில்தான் அவர்களுக்கான நிலம் கண்டறியப்பட்டது.

அதிமுக, திமுக ஆட்சியில் பஞ்சமி நிலம் தொடர்பாக குழு, கமிட்டி அமைக்கப்பட்டது. ஆர்டிஐ மூலமாக பெறப்பட்ட தகவலின்படி 12 லட்சம் ஏக்கர் இருந்த பஞ்சமி நிலம், தற்போது 1.86 லட்சம் ஏக்கர் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

முதல்வரின் வழிக்காட்டுதலின்படி, பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஆணையம் அமைக்கப்படும். ஏற்கெனவே இருந்த ஆணையங்களைவிட சிறப்பானதாக அது இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT